காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இன்னும் ஏராளம் - அரசியல் நிபுணர்கள் கருத்து

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (திங்கட்கிழமை) நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இன்னும் அதிகம் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.;

Update:2023-01-30 04:47 IST

கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரசின் வீழ்ச்சி படிப்படியாக தொடங்கியது. பல மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை இழந்தது.

அத்துடன் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பா.ஜனதாவுக்கு தாவியதும், ராகுல் காந்தியின் விலகல் மற்றும் சோனியா காந்தியின் உடல் நலக்குறைவுகளால் கட்சித்தலைமையில் ஏற்பட்ட நிச்சயமற்றதன்மையும் கட்சியை காலப்போக்கில் கரைத்து விட்டன.

இந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சிறப்பாக தயாராகும் நோக்கில் கட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ராகுல் காந்தி பாதயாத்திரை

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, கட்சிக்கு நிரந்தர தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவரும் ஆளும் பா.ஜனதா அரசை வலிமையாக எதிர்த்து வருகிறார்.

அதேநேரம் மக்களுடனான கட்சியின் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

சுமார் 4,000 கி.மீ. தூர இந்த யாத்திரை இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. இந்த யாத்திரை கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், ராகுல் காந்தியின் பிம்பத்தை உயர்த்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.

அடுத்து என்ன?

அதேநேரம் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த யாத்திரையின் பலன்கள் மட்டுமே போதுமானது அல்ல என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். அந்த கட்சிக்கு முன்பு இன்னும் பல சவால்கள் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

எனவே தேர்தலை எதிர்கொள்ளும் பாதையில், அடுத்து என்ன? என்பதை கட்சி வெளியிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் பிரபல அரசியல் நிபுணரும், காங்கிரசின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது, 'ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக்ரோஷமாக களமாடி வருகிறார்' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'இந்த ஆண்டு நடைபெறும் 9 மாநில சட்டசபை தேர்தல்களை வாழ்வா? சாவா? போராட்டமாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய அரையிறுதி ஆட்டமாகவும் காங்கிரஸ் கருத வேண்டும்' எனவும் கூறினார்.

கட்சி கட்டமைப்பு

இந்த கருத்தை எதிரொலித்த டெல்லியை சேர்ந்த அரசியல் நிபுணர் சஞ்சய் குமார், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் காங்கிரசின் வெற்றி மிகவும் முக்கியம் என எச்சரித்தார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பந்தயத்தில் காங்கிரஸ் இருக்க வேண்டுமானால் இந்த மாநிலங்களின் 93 எம்.பி. தொகுதிகள் கட்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறினார்.

இது மட்டுமின்றி உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத் போன்ற மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் கட்சிக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால் எனக்கூறிய அவர், இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும் நிலையில், 'அடுத்து என்ன?' என்ற கேள்விக்கான பதிலை கட்சி வெளியிட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி அணிக்கு தலைமை

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் மூலம் பா.ஜனதாவுக்கு எதிரான அணியை கட்டமைப்பதற்கான தகுதியை காங்கிரஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ள நேரு பல்லைக்கழக பேராசிரியர் மணிந்திர நாத் தாகூர், ஆனால் அந்த அணிக்கு தலைமை தாங்குவதற்கு இன்னும் வலிமையான வடிவத்தை பெற வேண்டும் என்றும் கூறினார். இது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

இன்று நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தின் இறுதி விழாவில் பங்கேற்க 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும் தலைவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, எதிர்க்கட்சி அணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும் சூழல் தெரியவரும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்