வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக டிசம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Update: 2023-11-29 17:35 GMT

Image Courtacy: ANI

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடந்து குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக டிசம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 2ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமாறும் மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப்பது, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் பெண்களுக்கு ஒதுக்கீட்டை வழங்குவது உள்ளிட்ட 7 புதிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றை மாற்றுவதற்கு முன்மொழியப்பட்ட மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்கள் உட்பட 18 மசோதாக்களை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்