வெங்காய விலையை கட்டுப்படுத்த பாஜக அரசு முயற்சிக்க வேண்டும் - உத்தவ் தாக்கரே சிவசேனா

சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பலாம், முதலில் வெங்காய விலையை கட்டுப்படுத்த பாஜக அரசு முயற்சிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தெரிவித்துள்ளது.

Update: 2023-08-25 10:48 GMT

மும்பை,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த புதன்கிழமை மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. ரோவர் தற்போது நிலவில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் - 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில், சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பலாம் முதலில் வெங்காய விலையை கட்டுப்படுத்த பாஜக அரசு முயற்சிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தெரிவித்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவிகிதம் வரி விதித்ததற்கும் உத்தவ் தாக்கரே சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சிக்கு சொந்தமான பத்திரிக்கையான சாம்னாவில் இன்று வெளியான தலையங்கத்தில், நிலவு, சூரியன், செவ்வாய் கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பும் பணியில் நாட்டு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது நல்லது தான், ஆனால் அதேவேளை வெங்காய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது அவசியம்.

மத்திய அரசு சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பலாம், ஆனால், அதற்கு முன்பாக வெங்காய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வெங்காய பிரச்சினைக்கு தீர்வு காணவில்லையென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் உணர்வதற்கு முன் உங்கள் திட்டம் கட்டுப்பாடின்றி சென்றுவிடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டதை கண்டித்து மராட்டியத்தின் நாசிக், அகமதாபாத், புனே ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

மேலும் செய்திகள்