வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
மேலும் டெங்கு காய்ச்சலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கையாளுவதற்கான தயார்நிலையை அவர் ஆய்வு செய்தார். அப்போது நாடு முழுவதும் டெங்கு பரவலின் நிலை மற்றும் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு எடுத்துக்கூறினர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்
பின்னர், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயால் ஏற்படும் சவாலை சுட்டிக்காட்டிய மன்சுக் மாண்டவியா, வைரஸ் தொற்றுக்கு எதிராக தயாராக வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினார். குறிப்பாக, தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இதைப்போல டெங்கு காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும் மத்திய மந்திரி கேட்டுக்கொண்டார். குறிப்பாக டெங்கு தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார். மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரிசோதனை கருவிகள்
அந்தவகையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பரிசோதனை கருவிகள் உள்பட மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் கூறினார். தொற்று தொடர்பான தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது என்பதை மாண்டவியா எடுத்துரைத்தார்.
டெங்குவைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு, ஆய்வக பரிசோதனை, நோய் மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்ட அமலாக்கத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு போதுமான நிதியை வழங்குகிறது என்றும் மன்சுக் மாண்டவியா கூறினார்.