டெல்லியில் பரபரப்பான சாலையில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து காருக்குள் தள்ளிய இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து இளைஞர் காருக்குள் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-03-19 12:39 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் மங்கல்புரி பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் நேற்று இரவு ஒரு இளம்பெண்ணை இளைஞர் தரதரவென இழுத்து காருக்குள் அடைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

பரபரப்பான சாலையில் சிக்னலில் ஒரு இளைஞர் இளம்பெண்ணிடம் அத்துமீறி தாக்கி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளிய நிலையில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தை சிக்னலில் வெறொரு காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சமூகவலைதளத்தில் விவாதமும், அந்த வீடியோவும் வைரலானது.

இது தொடர்பாக தாமாக முன்வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த காரை உபர் மூலம் 2 இளைஞர்கள், ஒரு இளம்பெண் வாடகைக்கு எடுத்துள்ளனர். ரோஷ்னி பகுதியில் இருந்து விகாஷ்புரி வரை வாடகைக்கு எடுத்துள்ளனர். காரில் சென்றபோது இளம்பெண்ணுக்கும் ஒரு இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிக்னலில் காரில் இருந்து அந்த இளம்பெண் கீழே இறங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரில் இருந்து கீழே இறங்கி நடு சாலையில் அந்த இளம்பெண்ணை அத்துமீறி தாக்கி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளியுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த வாடகை காரை ஓட்டிய டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இளம்பெண் யார்? அவரை தாக்கி காருக்குள் தள்ளிய இளைஞர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் பரபரப்பான சாலையில் இளம்பெண்ணை இளைஞர் தாக்கி காரில் தள்ளிய நிலையில் இதை அங்கு இருந்தவர்கள் யாரும் இந்த தாக்குதலை தடுக்கவில்லை... மேலும் அந்த இளம்பெண்ணுக்கு யாரும் உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்