ஜப்பானில் குவாட் தலைவர்கள் சந்திப்பு நடத்த முடிவா...? மத்திய வெளியுறவு செயலாளர் தகவல்

ஜப்பானில் குவாட் தலைவர்களின் சந்திப்பை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம் என்று மத்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-05-18 12:48 GMT

புதுடெல்லி,

ஜப்பானிய தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து உள்ளார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த உச்சி மாநாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை பற்றி உறுப்பு நாடுகளுடனான ஜி-7 கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேச இருக்கிறார். உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், உறுதியான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசுகிறார்.

உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அதில் பங்கேற்கும் தலைவர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளையும் அவர் நடத்துகிறார். இதன்பின் பப்புவா நியூ கினியாவுக்கு 22-ந்தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.

இதனை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான 3 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி செல்கிறார். அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடியால் அதிபர் பைடனின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், குவாட் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

எனினும் பிரதமர் மோடியின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி இந்திய வம்சாவளியினர் முன் உரையாற்றுகிறார். வருகிற 24-ந்தேதி பிரதமர் அல்பானிசுடன் இருதரப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அந்நாட்டின் சி.இ.ஓ.க்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுடனும் அவர் உரையாட இருக்கிறார்.

இதுபற்றி, மத்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் இருதரப்பு ஆலோசனை மேற்கொள்வார்.

ஹிரோசிமா நகரில் மகாத்மா காந்தி சிலை ஒன்றையும் அவர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஹிரோசிமா நகரில் குவாட் தலைவர்களின் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். பிரதமரின் 2-வது 3 நாடுகள் பயணத்தின்போது, பப்புவா நியூ கினியாவுக்கு செல்வார் என அவர் கூறியுள்ளார்.

ஜி-7 மாநாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களுடனும், விருந்தினர்களாக வரும் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனும் இருதரப்பு ஆலோசனைகளை பிரதமர் மோடி மேற்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்