தசரா யானைகளின் உயரம், எடை அளவு கணக்கீடு

தசரா யானைகளின் உயரம், எடை அளவு கணக்கிடப்பட்டது. இதில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை 4,720 கிலோ எடையுடன் உள்ளது.

Update: 2023-09-02 18:45 GMT

மைசூரு

தசரா விழா

மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். அப்போது சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை யானைகள் புடை சூழ ஒரு யானை சுமந்து செல்லும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்காக நேற்று முன்தினம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளியில் இருந்து அபிமன்யு, அர்ஜூனா, பீமா, கோபி, தனஞ்செயா, வரலட்சுமி, விஜயா, மகேந்திரா, கஞ்சன் ஆகிய 9 யானைகளும் மைசூருவுக்கு முதல் கட்டமாக அழைத்து வரப்பட்டன.

இந்த யானைகள் நாளை மறுநாள்(5-ந் தேதி) பாரம்பரிய முறைப்படி மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட உள்ளன.

கஜ பயணம்

வீரனஒசஹள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கஜ பயணமாக வந்த யானைகள், பின்னர் அங்கிருந்து லாரியில் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.

அந்த யானைகள் நேற்று முன்தினம் 2.30 மணிக்கு மைசூரு எல்லையை வந்தடைந்தன. பின்னர் அங்கிருந்து அவைகள் மீண்டும் கஜ பயணத்தை தொடங்கி அணிவகுத்து நடந்து வந்தன.

அபிமன்யு யானை முன்னால் செல்ல அதைத்தொடர்ந்து 8 யானைகளும் அணிவகுத்து பின்னால் நடந்து சென்றன.

அப்போது யானைகள் முன்பு கலைக்குழுவினர் அணிவகுத்து சென்ற ஊர்வலமும் நடந்தது. சரியாக நேற்று முன்தினம் மதியம் 3.55 மணிக்கு 9 யானைகளும் மைசூருவில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தை வந்தடைந்தன.

தற்போது அவைகள் அங்கு உற்சாக குளியல்போட்டு ஒய்யாரமாக ஓய்வெடுத்து வருகின்றன.

காப்பீடு

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தசரா விழாவில் மொத்தம் 15 யானைகள் பங்கேற்கும். அதன்படி முதல்கட்டமாக 9 யானைகளை அழைத்து வந்துள்ளோம்.

இதில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையும் அடங்கும். எப்போதும் யானைகள் தசரா விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அழைத்து வரப்பட்டு வெடி சத்த பயிற்சி, நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

அதன்படி இந்த யானைகளுக்கும் நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

2-வது கட்டமாக பிரசாந்தா, சுக்ரீவா, ரோகித், லட்சுமி, ஹிரன்யா, லட்சுமி ஆகிய 6 யானைகள் அழைத்து வரப்பட உள்ளன. அவற்றை அழைத்து வருவதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை' என்றார்.

எடை அளவு

இந்த நிலையில் முதல்கட்டமாக அழைத்து வரப்பட்ட 9 யானைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவை நேற்று அளக்கப்பட்டது. அதன்படி தங்க அம்பாரியை சுமக்க உள்ள அபிமன்யு யானை 2.74 மீட்டர் உயரமும், 4 ஆயிரத்து 720 கிலோ எடையும் கொண்டுள்ளது.

அதன் வயது தற்போது 57 ஆகும். பீமா யானையின் வயது 23 ஆகும். அதன் உயரம் 2.85 மீட்டர் ஆகும். எடை 3 ஆயிரத்து 800 கிலோவாக உள்ளது. 3-வதாக மகேந்திரா யானையின் வயது 40 ஆகும்.

அதன் எடை 3 ஆயிரத்து 800 கிலோ ஆகும். உயரம் 2.75 மீட்டராக உள்ளது. இந்த 3 யானைகளும் மத்திகோடு யானைகள் முகாமிலிருந்து வந்தவை ஆகும்.

4-வதாக அர்ஜூனா யானையின் வயது 65 ஆகும். அதன் உயரம் 2.88 மீட்டர், எடை 5 ஆயிரத்து 800 கிலோ. இது பெல்லே யானைகள் முகாமில் இருந்து வந்துள்ளது.

5-வதாக தனஞ்செயா யானையின் உயரம் 2.80 மீட்டர், எடை 4 ஆயிரம் கிலோ, இதன் வயது 43. 6-வதாக கோபி யானையின் வயது 41, உயரம் 2.86 மீட்டர், எடை 3,700 கிலோ. 7-வதாக விஜயா யானையின் வயது 63, உயரம் 2.44 மீட்டர், எடை 3,250 கிலோ. 8-வதாக கஞ்சன் யானையின் வயது 24, உயரம் 2.62 மீட்டர், எடை 3,700 கிலோ. இவை 4-ம் துபாரே யானைகள் முகாமில் இருந்து வந்துள்ளன.

9-வதாக பீமனகட்டே யானைகள் முகாமில் இருந்து வந்த வரலட்சுமி யானையின் வயது 67 ஆகும். அதன் உயரம் 2.36 மீட்டர், எடை 3,300 கிலோ ஆகும்.

பாகன்களுக்கு ரூ.2 கோடியில் காப்பீடு

மைசூரு மாவட்ட நிர்வாகம் யானை பாகன்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் யானைகளால் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதை ஈடு செய்யும் வகையில் ரூ.2 கோடியே 2 லட்சத்துக்கு காப்பீடு செய்துள்ளது.

இதற்காக தி நியூ இந்தியா இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.56 ஆயிரத்து 781 செலுத்தி காப்பீடு பெற்றுள்ளது. இதில் யானை பாகன்கள், பராமரிப்பாளர்களுக்கு மட்டும் ரூ.1.52 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்