விரைவில் மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கப்படும்-பட்னாவிஸ் தகவல்
விரைவில் மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கப்படும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை
மராட்டியத்தில் கடந்த செவ்வாய்கிழமை ஷிண்டே அரசின் மந்தரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அரசு பதவி ஏற்று 40 நாட்களுக்கு பிறகு தான் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. எனினும் மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கப்படவில்லை. இதேபோல மராட்டியத்தில் 43 பேர் வரை மந்திரிகளாக முடியும். ஆனால் ஷிண்டே, பட்னாவிசை சேர்த்து தற்போது 20 மந்திரிகளே உள்ளனர். இந்தநிலையில் மந்திரிகளுக்கு இலாக்காக ஒதுக்கப்படாமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இலாக்கா ஒதுக்கீடில் மோதல் நடந்து வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக துணை முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் விமான நிலையத்தில் கூறியதாவது:- மந்திரிகளாக பதவி ஏற்றவர்களுக்கு விரைவில் இலாக்கா ஒதுக்கப்படும். மாநிலத்தில் வெள்ளப்பாதிப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திரசேகர் பவன்குலேவுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் தீவிர பா.ஜனதா தொண்டர். அடிமட்டத்தில் இருந்து வந்தவர். கட்சி அவருக்கு கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக செய்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.