கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது. பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தேர்வு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2023-03-09 20:50 GMT

பெங்களூரு:-

கண்காணிப்பு கேமராக்கள்

கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு என்று சொல்லக்கூடிய பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நேற்று தொடங்கியது. முதல் நாளில் கன்னட மொழி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,109 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

முறைகேடுகளை தடுக்க மாவட்ட அளவில் 64 கண்காணிப்பு குழுக்களும், தாலுகா அளவில் 525 குழுக்களும், 2 ஆயிரத்து 373 சிறப்பு குழுக்களும் சோதனையில் ஈடுபட்டன. தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள கருவூலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மந்திரி பி.சி.நாகேஸ்

பள்ளி கல்வித்துறை மந்திாி பி.சி.நாகேஸ், துமகூரு மாவட்டம் திப்தூர் ஆண்கள் பி.யூ.கல்லூரி தேர்வு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அவர் பூக்கள் வழங்கி வாழ்த்தினார். தைரியமாக தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கர்நாடத்தில் இன்று (நேற்று) பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாளில் கன்னட தேர்வு நடக்கிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இந்த முறை 'எம்.சி.கியூ.' (விடையை தேர்ந்தெடுத்து எழுதுதல்) முறையில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கேள்வித்தாள் படிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்