சீன எல்லை நிலவரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
சீன எல்லை நிலவரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
2020-ம் ஆண்டு நடந்த லடாக் மோதலுக்குப்பின் இந்தியா-சீனா எல்லையில் நிலவும் சூழல் குறித்து அனைத்துக்கட்சிகளையும் கூட்டி மத்திய அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில், 'லடாக் மோதல் ஏற்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த விவகாரத்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட விவரங்களை எடுத்துக்கூறி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு நம்பிக்கை ஊட்ட வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துமாறு ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கிறோம்' என தெரிவித்தார்.
லடாக் மோதல் நடந்த நேரத்திலேயே நாடாளுமன்றத்தில் 65 கேள்விகள் எழுப்பியதாகவும் ஆனால் அரசு பதிலளிக்கவில்லை என்றும் கூறிய மணிஷ் திவாரி, எந்த கேள்விக்கும் மத்திய அரசு பதிலளிக்க விரும்பவில்லை எனவும், இதில் ஒளிவுமறைவு கடைப்பிடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அருணாசல பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை சீனா மாற்றியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மணிஷ் திவாரி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் சீனா இவ்வாறு நடந்து கொண்டதாகவும், அப்போது மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததாகவும் கூறினார்.
இதைப்போல தற்போதும் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடும் என எதிர்பார்த்ததாகவும் கூறினார்.