பினராயி விஜயன் மீதான லஞ்ச குற்றச்சாட்டு: முழு விவரங்களையும் ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை - கவர்னர் பேட்டி

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மீதான லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான முழு விவரங்களையும் ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.

Update: 2023-08-14 22:36 GMT

கோப்புப்படம்

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தாது மணல் நிறுவனம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழாமல் இருக்க கேரள அரசியல்வாதிகளுக்கு ஓராண்டிற்கு ரூ.96 கோடி லஞ்சமாக கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்தநிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கொச்சிக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இதுகுறித்து தான் விரைவில் ஆராய்ந்து உண்மையை கண்டறிய உள்ளேன். வீணா விஜயன் மீது கூறப்பட்டது வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல.

வருமான வரித்துறையினர் வெளியிட்ட தகவல்கள் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இந்த லஞ்சம் குறித்து வருமான வரித்துறையினர் கண்டறிந்ததாக நான் ஊடகம் மூலம் தெரிந்துகொண்டேன். இதுகுறித்து பல்வேறு தகவல்களை பெற வேண்டி உள்ளதால், அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்கப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதன் முழு விவரங்களையும் ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்