தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்த சிறுவன் திடீர் சாவு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுவன் திடீரென உயிரிழந்தான். டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தங்களது மகன் இறந்துவிட்டதாக அவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.;
கோனனகுன்டே:
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுவன் திடீரென உயிரிழந்தான். டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தங்களது மகன் இறந்துவிட்டதாக அவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
காய்ச்சல்
பெங்களூரு கோனனகுன்டே பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு பிரீத்தம் நாயக் (வயது 10) என்ற மகன் இருந்தான். அந்த சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 6-ந் தேதி பிரீத்தம் நாயக்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவனை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் சிறுவனுக்கு டாக்டர் ஊசி செலுத்திவிட்டு, சில மாத்திரைகளை பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாத்திரைகளை வாங்கிவிட்டு சிறுவனுடன் பெற்றோர் வீடு திரும்பினர்.
எனினும் அன்றைய இரவு சிறுவனுக்கு உடல் நலம் மோசமடைந்தது. அதாவது காய்ச்சலுக்காக ஊசி போடப்பட்ட இடம் வீக்கம் அடைந்தும், வலியும் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் பிரீத்தம் நாயக்கை, மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் வலி தாங்க முடியாமல் சிறுவன் துடித்தான். இதையடுத்து ராஜாஜிநகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சிறுவன் சேர்க்கப்பட்டான்.
திடீர் சாவு
அவனை அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுவனின் சிறுநீரகங்கள் செயல் இழந்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் உயர் சிகிச்சைக்காக சிறுவனை, மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.
அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர், சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசில் புகார்
மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் அவர்கள் தங்கள் மகனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர் தவறான சிகிச்சை அளித்து விட்டதாக கூறி, கோனனகுன்டே போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுக்கு போடப்பட்ட ஊசி மருந்து காலாவதியானதாக இருக்கலாம் என்றும், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.