கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு

அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ந்தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது.

Update: 2024-07-13 10:07 GMT

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபை எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க.வும், மத்தியில் உள்ள அதன் அரசும் விளையாடி கொண்டிருக்கிறது.

அவருடைய உடல் எடை 8.5 கிலோ வரை குறைந்துள்ளது. சிறையில் இருந்தபோது, அவருக்கு ரத்த சர்க்கரை அளவும் வெகுவாக குறைந்து போனது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். எனினும், பா.ஜ.க. இதற்கு பதில் எதுவும் தரவில்லை.

அவர் தொடர்ந்து பேசும்போது, அவரை சிறையில் இருந்து விரைவாக வெளியே கொண்டு வந்து, மருத்துவ சிகிச்சை அளித்திருக்கவில்லை என்றால், அவருக்கு ஏதேனும் தீவிர விளைவுகள் ஏற்பட்டிருக்க கூடும் என்றும் கூறினார்.

அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ந்தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது. அவருடைய உடல் எடை தற்போது, 61.5 கிலோவாக உள்ளது.

தொடர்ச்சியான இந்த உடல் எடை குறைவுக்கு காரணம் தெரியவில்லை. இந்த உடல் எடை குறைவானது, சில தீவிர வியாதிக்கான அறிகுறியாக இருக்கலாம்.

சிறையில் உள்ள அவருடைய உடல்நிலையை பற்றி கெஜ்ரிவாலின் குடும்பம், ஆம் ஆத்மி மற்றும் அவருடைய நலம் விரும்பிகள் வருத்தத்தில் உள்ளனர். பா.ஜ.க. மற்றும் மத்தியில் உள்ள அதன் அரசின் நோக்கம், அவரை சிறையில் வைத்து, அவருடைய வாழ்க்கையில் விளையாட வேண்டும் என்பதே ஆகும்.

இதனால், அவருக்கு சில தீவிர உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும், சி.பி.ஐ. அவரை கைது செய்துள்ள சூழலில், அவர் இன்னும் சிறையிலேயே அடைக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்