மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டுமே- ஜேபி நட்டா பேச்சு
ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை குடும்ப அரசியலுக்கு எதிராக பாஜக போராடி வருவதாக ஜேபி நட்டா பேசினார்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பாஜகவின் கட்சி தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் பாஜக தனது சித்தாந்த பிண்ணனியுடன் வாரிசு அரசியலுக்கு எதிராக போராடுவதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ஜேபி நட்டா மேலும் பேசியதாவது:
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டுமே. எங்கள் போராட்டம் குடும்ப அரசியலுக்கு எதிரானது. ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை நாங்கள் அதற்கு எதிராக போராடி வருகிறோம்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராகவும் போராட்டம் நடக்கிறது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் கட்சிக்கு எதிராகவும் போர் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகள்.
பாஜக தனது சித்தாந்த பிண்ணனியுடன் வாரிசு அரசியலுக்கு எதிராக போராடுகிறது. பாஜகவை தவிர எந்த ஒரு கட்சியும் சித்தாந்தங்களுடன் இல்லை.
இவ்வாறு ஜேபி நட்டா தெரிவித்தார்.