ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-11 14:31 GMT

Image Courtacy: ANI

ஜாஞ்ச்கிர்-சம்பா (சத்தீஸ்கர்),

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தொடங்கியது. அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், ஓடிசா மாநிலத்தை கடந்து தற்போது சத்தீஸ்கரில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜ.க). சேர்ந்தவர்கள் சமூகத்தில் வெறுப்பை பரப்புவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் இருந்து ராகுல் காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையைத் தொடங்கினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மதங்கள், மொழிகளை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் மாநிலங்களை ஒன்றுக்கொன்று சண்டையிட செய்கிறார்கள். வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே முடியும்.

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் வெறுப்புணர்வு பரவி வருகிறது. நீங்கள் தமிழ், பெங்காலி, உருது பேசுகிறீர்கள் அதனால்தான் உங்களை எங்களுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். இது நாட்டை பலவீனப்படுத்துகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். வரவிருக்கும் தலைமுறைக்கு அன்பு நிறைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே இந்த யாத்திரையின் நோக்கம்" என்று ராகுல் காந்தி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்