உங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளதா...? ராகுல் காந்திக்கு பா.ஜ.க பதிலடி...!
ராகுல் காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் என பா.ஜ.க கூறி உள்ளது.
புதுடெல்லி
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் 2, 3 பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுறது என கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
உங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளதா? நாடு சர்வாதிகாரத்தைப் பார்த்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில்தான். எமர்ஜென்சி காலத்தில் தான் நாடு சர்வாதிகாரத்தை பார்த்தது. ராகுல் காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் என கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காந்தியின் மவுனம் குறித்து மேலும் பேசிய ரவிசங்கர் பிரசாத், "அவர் உண்மையை மட்டும் பேசினால், அவர் ஏன் ஜாமீனில் இருக்கிறார் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர் எந்த குற்றத்தில் ஜாமீனில் இருக்கிறார்?.
காங்கிரஸ் தலைவருக்கு அரசியலில் தீவிரம் இல்லை. அரசு அமைப்புகளை குறை கூற வேண்டாம்."உங்களை காப்பாற்றிக்கொள்ள அமைப்பை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்" என்றும் கேட்டுக் கொண்டார்.