பிட்காயின் மோசடி குறித்து மீண்டும் விசாரணை; சி.ஐ.டி.க்கு பெங்களூரு போலீஸ் கமிஷனர் கடிதம்

பிட்காயின் மோசடி வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என சி.ஐ.டி.க்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2023-06-27 20:44 GMT

பெங்களூரு:

பிட்காயின் மோசடி வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என சி.ஐ.டி.க்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.

மந்திரிகள் சிலருக்கு...

கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி நடைபெற்றது. அப்போது பிட்காயின் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது கர்நாடக அரசின் இணையதளங்களை முடக்கி ஒரு கும்பல் பலகோடி ரூபாயை மோசடி செய்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி என்பவர் கைது செய்யப்பட்டார். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இதுதொடர்பான அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்தனர். இதற்கு பிறகு, இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், மந்திரிகள் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்ப்பு இருந்ததாக கூறப்பட்டது தான் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில், முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா கூறி இருந்தார்.

கடிதம் எழுதினார்

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வரும் கூறி இருந்தார். இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், இதுதொடர்பாக சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. எம்.ஏ. சலீமுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய பிட்காயின் மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதுதொடர்பாக அறிக்கையும் சமர்ப்பித்தனர். அதில், பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி, போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாகவும், அதற்காக வெளிநாடுகளிலும் அவர் கைவரிசை காட்டி இருந்ததாகவும் கூறப்பட்டது. அதற்கு பிறகு விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. எனவே சி.ஐ.டி. போலீசார் இந்த பிட்காயின் மோசடி குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்