டெல்லி எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.90 ஆயிரம் ஆக உயர்த்த மசோதா நிறைவேற்றம்

டெல்லி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா ஒன்று இன்று நிறைவேறியது.

Update: 2022-07-04 11:09 GMT



புதுடெல்லி,



டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவரது அரசில் துணை முதல்-மந்திரியாக மணீஷ் சிசோடியா இருந்து வருகிறார்.

இந்நிலையில், மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லியில் 11 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்கள், மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தனர். அது ரூ.30 ஆயிரம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர்களது மொத்த சம்பளம் ரூ.90 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் என கூறியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் இதுபற்றி பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. 7 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு சில எதிர்ப்புகளை தெரிவித்தது. அவர்களது ஆலோசனைகளை கேட்டு அவற்றை சேர்த்த பின்னர், டெல்லி சட்டசபையில் மீண்டும் ஒரு முறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசும் இதனை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, டெல்லி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா இன்று நிறைவேறியுள்ளது.

இந்த மசோதாவுக்கு மத்திய உள்விவகார அமைச்சகம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் ஒப்புதல் அளித்தது என கூறப்படுகிறது. இதனால், மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தெலுங்கானாவில் மிக அதிக அளவாக சம்பளம் மற்றும் படிகள் என்று மொத்தம் மாதம் ஒன்றுக்கு எம்.எல்.ஏ.க்கள் ரூ.2.5 லட்சம் பெறுகின்றனர். உத்தர பிரதேச எம்.எல்.ஏ.க்கள் மாதம் ஒன்றிற்கு ரூ.1.87 லட்சம் சம்பளம் பெறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்