உலகின் 2-வது வாகன நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு

உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Update: 2023-02-16 20:26 GMT

பெங்களூரு:

பெங்களூரு முதல் இடம்

பெங்களூரு வாகன நெரிசல் மிகுந்த நகரமாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. தற்போது சர்வதேச அளவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தை பிடித்துள்ளது. 'டாம் டாம்' என்ற தனியார் நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு வாகன நெரில் குறித்து ஆய்வு நடத்தி உலகில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தான் பெங்களூரு 2-வது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. பெங்களூருவின் மத்திய பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகிறது. வாகன நெரிசல் பட்டியலில் இங்கிலாந்தின் லண்டன் நகரம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள்20 விநாடிகள் ஆகிறது. டெல்லி நகரம் 34-வது இடத்திலும், மும்பை 47-வது இடத்திலும் உள்ளன.

பயண வேகம்

மெட்ரோ நகரம் முழுவதும் (நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தொழிற்பேட்டைகள், கிராமப்புறங்கள்) என்று எடுத்துக்கொண்டால், அதற்கான பட்டியலில் பெங்களூரு 5-வது இடத்தில் இருக்கிறது. இந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 23 நிமிடங்கள் 40 விநாடிகள் ஆகிறது. இவற்றில் சராசரி பயண வேகம் 22 கிலோ மீட்டர். கடந்த 2021-ம் ஆண்டு வாகன நெரிசல் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தது. தற்போது அதில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி தான் மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 33 நிமிடங்கள் 50 விநாடிகள் ஆனது. பெங்களூரு மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 260 மணி நேரம் (10 நாட்கள்) வாகனத்தை ஓட்டுவதிலும், 134 மணி நேரம் வாகன நெரிசலிலும் நேரத்தை கழிக்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்