பெங்களூரு வளர்ச்சி ஆணைய முறைகேடு வழக்கு லோக் அயுக்தாவுக்கு மாற்றம்

பெங்களூரு வளர்ச்சி ஆணைய முறைகேடு வழக்கு லோக் அயுக்தா போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-30 18:45 GMT

பெங்களூரு:-

பி.டி.ஏ.வில் முறைகேடுகள்

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில்(பி.டி.ஏ) வீட்டுமனைகள் ஒதுக்கியது, நில அபகரிப்பு உள்ளிட்ட பல முறைகேடுகள் நடைபெற்றிருந்தது. இதுதொடர்பாக சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வழக்குகளில் போலீசார் விசாரணை நடத்தி, சில அதிகாரிகளை கைது செய்து சிறைக்கும் அனுப்பினர்.

அதே நேரத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திலும் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள். அதன்பேரில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லோக் அயுக்தா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சரணப்பா வலியுறுத்தல்

இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பான 15 வழக்குகளும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.

அதுபோல் லோக் அயுக்தா போலீசாரும் தங்கள் தரப்பு விசாரணையை நடத்தி வந்தனர். இதனால் பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரே மாதிரியான விசாரணையை இரு போலீஸ் பிரிவிடம் இருந்து எதிர் கொண்டனர்.

இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு போலீசார் நடத்தி வரும் விசாரணையை, லோக் அயுக்தா விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, லோக் அயுக்தா அமைப்புக்கு கடிதம் எழுதினர்.

லோக் அயுக்தாவுக்கு மாற்றம்

அதன்பேரில் இணை கமிஷனர் சரணப்பாவின் கோரிக்கையை லோக் அயுக்தா அமைப்பு ஏற்றுக் கொண்டது. அதைத்தொடர்ந்து, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான 15 வழக்குகளும் லோக் அயுக்தாவுக்கு மாற்றப்பட்டு, அதற்கான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்