அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் இருக்கும் - மம்தா பானர்ஜி
அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மேற்கு வங்காளம் முதலிடத்தைப் பிடிக்கும் என்று அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மேற்கு வங்காளம் முதலிடத்தைப் பிடிக்கும் என்று அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். காரக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி கூறியதாவது:-
வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் இருக்கின்ற தொழில்துறையை இணைப்பதே அரசாங்கத்தின் வேலை. வேலை வாய்ப்பை உருவாக்குவதே தற்போது எனது இலக்கு. அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வங்காளத்தை வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முதலிடமாக்குவதே எனது நோக்கம். திறன் மேம்பாட்டில் மேற்கு வங்காளம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன.
நாட்டில் 45 சதவீதம் வேலை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். விரைவில் 89,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காரக்பூர் தொழிற்பேட்டையில் புதிய திட்டத்தில் டாடா மெட்டாலிக்ஸ் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 500 முதல் 1000 வேலை வாய்ப்புகள் உருவாக்கும்.
மாநில அரசு பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தியோச்சா பச்சாமி நிலக்கரித் தொகுதியில் சுரங்கத்தை மேம்படுத்தி வருகிறது. அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தியோச்சா பச்சாமி நிலக்கரிச் சுரங்கப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆனால் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தினமும் இடையூறுகளை உருவாக்குகின்றன.
ஷேல் எரிவாயு உற்பத்தி அசன்சோலில் தொடங்கப்பட உள்ளது. தான்குனி-அமிர்தசரஸ் சரக்கு வழித்தடத்தில் பல தொழில்கள் வரவுள்ளன. தோல் தொழில் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
தாஜ்பூர் ஆழ்கடல் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. மால்டா மற்றும் பலூர்காட்டில் புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. கூச்பெஹாரில் ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 26 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்களுக்கான நிலம் மற்றும் கூச்பெஹரில் தற்போதுள்ள நிலத்தின் விரிவாக்கம் ஆகியவை மாநிலத்தால் கிடைக்கப்பெற்றுள்ளன, ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடு வழங்குவதற்கான 'பங்களார் பாரி' திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு தடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.