காருக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து பெங்களூரு காதல் ஜோடி தற்கொலை

உடுப்பியில் காருக்குள் இருந்தபடி பெட்ரோல் ஊற்றி பெங்களூருவை சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

Update: 2022-05-22 17:25 GMT

மங்களூரு:

உடல் கருகி 2 பேர் பலி

உடுப்பி அருகே ஹெக்குந்தே பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காரில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது.

அப்போது தான் காருக்குள் ஆணும், பெண்ணும் இருந்ததும், அவர்கள் 2 பேரும் உடல் கருகி பலியானதும் தெரியவந்தது. இதையடுத்து பிரம்மாவர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடல் கருகி பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெங்களூரு தம்பதி

காருக்குள் இருந்தபடி உடல் கருகி பலியானவர்கள் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இதுபற்றி பிரம்மாவர் போலீசார் மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில், காருக்குள் உடல் கருகி பலியானது பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்த யஷ்வந்த் (வயது23), ஜோதி (வயது23) என்பது தெரியவந்தது.

காதல் ஜோடியான அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும், காருக்குள் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

காதலுக்கு எதிர்ப்பு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, யஷ்வந்த்தும், ஜோதியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் காதலுக்கு ஜோதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதியையும், யஷ்வந்த்தையும் கண்டித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜோதியும், யஷ்வந்த்தும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் மாயமானதாக இருவீட்டாரும் தனித்தனியாக ஹெப்பால் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதற்கிடையே மங்களூருவுக்கு வந்த காதல் ஜோடி, அங்கு வைத்து திருமணம் செய்துகொண்டனர்.

தற்கொலை

பின்னர் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்களை ஏற்று கொள்ளமாட்டார்கள் என கருதி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் மங்களூருவை சேர்ந்த ஹூசைன் என்பவரின் காரை வாடகைக்கு எடுத்து உடுப்பி நோக்கி சென்றுள்ளனர். நேற்று அதிகாலை உடுப்பி அருகே பிரம்மாவர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹெக்குந்தே பகுதியில் காரை நிறுத்தினர்.

இதையடுத்து காருக்குள் இருந்தபடியே தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி யஷ்வந்த்தும், ஜோதியும் தீவைத்து கொண்டனர். இதில் அவர்கள் காருடன் எரிந்து பலியானது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்