அயோத்தி ராமர் கோவிலை தகர்த்து மீண்டும் மசூதி கட்டப்படும்: அல்-கொய்தா பயங்கரவாதிகள் சூளுரை

அயோத்தி ராமர் கோவில் தகர்க்கப்பட்டு அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படும் என அல்-கொய்தா பயங்கரவாதிகள் சூளுரைத்து உள்ளனர்.

Update: 2023-01-08 07:32 GMT



புதுடெல்லி,


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும்.

2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும். அதனை தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும். கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவிலில், பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும். கோவிலின் 70 ஏக்கர் நிலத்துக்குள் வால்மீகி, கேவத், சபரி, ஜடாயு, சீதை, விநாயகர், லட்சுமணன் ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அல்-கொய்தா அமைப்பு சார்பில் வெளிவர கூடிய கஜ்வா-இ-ஹிந்த் என்ற பத்திரிகையில், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலை தகர்த்து விட்டு அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

110 பக்கங்கள் கொண்ட அந்த செய்தி இதழின் தலையங்க பகுதியில், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதுபோல், அது தகர்க்கப்பட்டு அந்த சிலைகளின் மீது பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும் என தெரிவித்துள்ளதுடன், இந்திய முஸ்லிம்கள் இந்த ஜிகாத்துக்கு (புனித போர்) ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அந்த செய்தியில், பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை குறிப்பிட்டு எங்களது அறிவுறுத்தலை, வெறும் பாகிஸ்தானிய அதிகார வகுப்பின் பிரசாரம் என்று அலட்சியம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த அச்சுறுத்தல் பற்றி மூத்த உளவு பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியர்கள் புரிந்து கொள்ளும்படியான, அவர்களோடு தொடர்பிலுள்ள யாரோ சிலரால் இந்த தகவல் செய்தி இதழில் எழுதப்பட்டு இருப்பதுபோல் தோன்றுகிறது என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அந்த செய்தியில், இந்திய முஸ்லிம்கள் இதனால் ஏற்படும் பொருள் இழப்பு பற்றி அஞ்ச கூடாது. ஏனெனில் பல தசாப்தங்களாக நீங்கள் வாழ்க்கை மற்றும் சொத்து ஆகியவற்றை இழந்து விட்டவர்கள். ஜிகாத்துக்கு இந்த வாழ்க்கையும், பொருளும் பயன்படுத்தப்பட்டால், அதன்பின்னர் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, மதசார்பற்ற என்ற பதம் ஆனது, இந்திய முஸ்லிம்களுக்கான 'ஒரு நரகம்' என குறிப்பிட்டு உள்ளது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை கோஷம் என்பது ஏளனத்திற்குரிய ஒரு கேலி நாடகம் ஆகும் என தெரிவித்து உள்ளது.

இதில் குறிப்பிடும்படியான செய்தியாக, அல்-கொய்தா ஜிகாத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது. அதனால், ஒட்டு மொத்த இந்திய துணை கண்டமும் இஸ்லாமிய அரசாட்சியின் ஒரு பகுதியாக மாறும். சிலை வழிபாடும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனால் 1988-ம் ஆண்டு உருவானது அல்-கொய்தா அமைப்பு. இந்த அமைப்பின் இந்திய நாட்டுக்கான நிர்வாக நடவடிக்கைகளை, பின்லேடனின் மரணத்திற்கு பின் புதிய தளபதியாக அறிவிக்கப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி மேற்பார்வை செய்து வருகிறார். இதற்கான அறிவிப்பை 2014-ம் ஆண்டு செப்டம்பரில் வீடியோ ஒன்றில் ஜவாஹிரி உறுதிப்படுத்தினார். இந்திய துணைகண்டத்தில் உள்ள புதிய கிளையையும் ஜவாஹிரி அப்போது தோற்றுவித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அல்-சவுத் கொய்தாவின் ஆசிய கிளையின் நிறுவன தளபதியாக சனா-உல்-ஹக் என்ற ஆசிம் உமர் என்பவர் செயல்பட்டார். 2019-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மூசா காலா மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் உமர் கொல்லப்பட்டார். அவர் உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்ட பகுதியை சேர்ந்தவர் ஆவர் என தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்