அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: மேற்கு வங்கத்தில் விடுமுறை அறிவிக்க மாநில பா.ஜ.க. தலைவர் வேண்டுகோள்

பா.ஜ.க.வைப் போல் அரசியலுடன் மதத்தை கலக்க நாங்கள் விரும்பவில்லை என திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

Update: 2024-01-20 20:16 GMT

கொல்கத்தா,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 22-ந்தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜும்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் 22-ந்தேதி பொது விடுமுறை அறிவிப்பதை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அதன்மூலமாக மேற்கு வங்க மக்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுக் கொண்டாடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், "இந்து பஞ்சாங்கம் அல்லது இந்து மத நாட்காட்டிகளில் ராமர் கோவில் திறப்பு குறித்த சிறப்பு தேதி ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? மக்களவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒரு அரசியல் நிகழ்வாகும். பா.ஜ.க.வை போல் அரசியலுடன் மதத்தை கலக்க நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்