ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீனை டெல்லி ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது.

Update: 2024-06-23 13:11 GMT

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பின்னர், ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 20ம் தேதி விசாரித்த ரோஸ் அவென்யூ கோர்ட்டு, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கெஜ்ரிவால் 21ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை 21ம் தேதி மதியம் விசாரித்த டெல்லி கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்தது. ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதால் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரோஸ் அவென்யூ கோர்ட்டு தனக்கு வழங்கிய ஜாமீனை டெல்லி ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்