வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேரும் சிறையில் அடைப்பு

வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக கைதான 15 பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2022-10-03 18:45 GMT

பெங்களூரு:

போலீஸ் காவல் நிறைவு

கர்நாடகத்தில் வன்முறையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதாக பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேரை பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களில் 2 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள்., மற்ற 13 பேரும் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் நசீம் பாஷா என்பவர் 3 மாநிலங்களின் பி.எப்.ஐ. அமைப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்ததுடன், வன்முறையை அரங்கேற்ற திட்டம் தீட்டி கொடுத்ததும் தெரியவந்தது.

கைதான 15 பேரின் செல்போன் தகவல்களும் அழிக்கப்பட்டு இருந்தன. அந்த தகவல்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கைதான 15 பேரின் போலீஸ் காவலும் நேற்றுடன் நிறைவு பெற்று இருந்தது. இதனால் 15 பேரையும் பெங்களூரு 10-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர்.

என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு மாற்றம்

அப்போது 15 பேரையும் மீண்டும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டனர். மேலும் 15 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, 15 பேருக்கும் போலீஸ் காவல் வழங்கவும் மறுத்தார்.

மேலும் 15 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு மீதான அடுத்த விசாரணையை 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். 6-ந் தேதி அன்று 15 பேரையும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்