மணிப்பூரில் வன்முறை: ராணுவம் களமிறக்கம்... இணையதள சேவை துண்டிப்பு...!
மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் உள்ள மாவட்டமான சவ்ரசந்திரபூரில் இரு தரப்புக்கும் இடையே நேற்று கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது. இந்த மோதலின் போது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. தெருக்களில் இருந்த கார்கள், பைக்குகள், கடைகளுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இந்த வன்முறை மெல்ல அண்டையில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறை சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் கலவரம் தொடர்பான காட்சிகளும் பகிரப்பட்டதால் கலவரம் மெல்ல மெல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரம் தொடர்பான வீடியோக்கள், போலி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.