போஜ்சாலா மதவழிபாட்டு தல சர்ச்சை: தொல்லியல்துறை ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
போஜ்சாலாவில் இந்திய தொல்லியல்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டம் போஜ்சாலா என்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலம் தங்களுக்கு சொந்தமானது என்று இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர்.
போஜ்சாலா கட்டிடம் இந்து மத கடவுளான சரஸ்வதியின் வழிபாட்டு தலம் என்று இந்து மதத்தினர் கூறுகின்றனர். அதேவேளை போஜ்சாலா கட்டிடம் கமல் மவுலா மசூதி என்று இஸ்லாமிய மதத்தினர் கூறுகின்றனர். இந்த கட்டித்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது.
இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே சுமூக தீர்வை எட்டும் வகையில் 2003ம் ஆண்டு இந்திய தொல்லியல்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவுபடி போஜ்சாலா கட்டிடத்தில் இந்து மதத்தினர் செவ்வாய் கிழமை வழிபாடு செய்யலாம். அதேபோல், வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஜ்சாலா கட்டிடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு செய்து வந்தனர்.
இதனிடையே, போஜ்சாலா கட்டிடம் இந்து மத கடவுள் சரஸ்வதியின் கோவில் என்றும் அதில் இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி இந்து நீதி முன்னணி என்ற அமைப்பு மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த மார்ச் 22ம் தேதி போஜ்சாலா கட்டிடத்தில் இந்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 90 நாட்களாக போஜ்சாலா கட்டிடத்தில் ஆய்வு நடத்திய தொல்லியல்துறை ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய போஜ்சாலா கட்டிடம் இந்து மத வழிபாட்டு தலம் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் 94 சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கற்கல், பாறைகல், மார்பில் கற்களால் செய்யப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடவுள் விநாயகர், பிரம்மா, நரசிம்மா, பைரவா, பிற கடவுள்கள், மனிதர், விலங்குகளின் உருவங்களை கொண்டுள்ளன. இந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
விலங்குகளில் சிங்கம், யானை, குதிரை, நாய், குரங்கு, பாம்பு, ஆமை, பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. மனித, விலங்களின் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இஸ்லாமிய மத வழிபாட்டு தல கட்டிடம் தொடங்கும் பகுதியில் உள்ள சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட கலைபொருட்கள் தற்போது கட்டப்பட்டுள்ள கட்டிடம் இதற்கு முன்னதாக கோவிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.