எங்கே போகிறது சமூகம்..? புத்தாண்டு கொண்டாட்டத்தில் பீர் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி மாணவர்கள்
மது அருந்தியது சிறுவர்கள் என்பதால் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அமராவதி:
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளியின் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலர், புத்தாண்டை முன்னிட்டு பள்ளியின் அருகில் கட்டுமான பணி நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று மது (பீர்) அருந்தி உள்ளனர். கட்டிடத்தில் இருந்து மாணவர்களின் சத்தம் கேட்டு, ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் மற்றும் பள்ளி டிரைவர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, மாணவர்கள் குடித்து கும்மாளம் போட்டதை கண்டுபிடித்துள்ளனர்.
மாணவர்கள் மது அருந்துவது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் 16 மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது பதிவாகியிருக்கிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயலில் ஈடுபட்டிருப்பது சிறுவர்கள் என்பதால் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆந்திராவில் மது அருந்துவதற்கு அனுமதிப்பதற்கான சட்டப்பூர்வ வயது 21 ஆகும். அதாவது, மாநிலத்தில் மதுபானங்களை சட்டப்பூர்வமாக வாங்குவதற்கும் அருந்துவதற்கும் தனிநபர்கள் குறைந்தது 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆனால் இப்போது சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மது அருந்துவது அரசுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
முன்பெல்லாம் பொதுவெளியில் மது அருந்துவது அசிங்கமான விஷயமாக பார்க்கப்பட்டது. மது அருந்துபவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு இருக்காது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. எந்த பண்டிகை வந்தாலும் பார்ட்டி என்ற பேச்சுதான் முதலில் வருகிறது. மது அருந்துவதுதான் கொண்டாட்டம் என்ற அளவுக்கு சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், போதையில் நடக்கும் குற்றங்களும் அதிகரிக்கின்றன. பெரும்பாலான கொலை குற்றங்களின் பின்னணியில் மது அருந்தும் பழக்கமும் ஒரு காரணமாக உள்ளது.