கிணற்றுக்குள் தவறி விழுந்த சகோதரனை காப்பாற்றிய 8 வயது சிறுமி
துமகூரு அருகே விளையாடும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்த சகோதரனை 8 வயது சிறுமி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமி தனது உயிரை பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்ததற்காக கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பெங்களூரு:-
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன்
துமகூரு மாவட்டம் குஜ்ஜங்கி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ஜிதேந்திரா. இவரது மனைவி ராஜகுமாரி. இந்த தம்பதிக்கு 8 வயதில் சாலு என்ற மகளும், 6 வயதில் ஹிமாம்சோ என்ற மகனும், 3 வயதில் ரஷி மற்றும் 2 வயதில் கபில் என்ற குழந்தைகளும் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்திரா தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே நின்று சாலு, ரஷி மற்றும் ஹிமாம்சோ ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹிமாம்சோ கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். தனது சகோதரன் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்து சாலு அதிர்ச்சி அடைந்தாள். உடனடியாக வீட்டில் இருந்த லைப் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு சகோதரனை காப்பாற்றுவதற்காக சாலு கிணற்றுக்குள் குதித்தாள்.
காப்பாற்றிய 8 வயது சிறுமி
இதைப்பார்த்து கிராம மக்களும் அங்கு ஓடிவந்தனர். அதே நேரத்தில் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய தனது சகோதரனை காப்பாற்ற சாலு முயன்றாள். அப்போது கிராம மக்களும் அங்கு வந்து விட்டதால், கிணற்றுக்குள் குதித்து சிறுமி மற்றும் சிறுவனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதன் காரணமாக சாலு, அவளது சகோதரன் ஹிமாம்சோ ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதே நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சகோதரனை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்த சிறுமி சாலுவின் தைரியத்தை கிராம மக்கள் பாராட்டினார்கள்.
சிறுமி சாலு கடந்த 4 மாதங்களாக நீச்சல் பயிற்சி பெற்று வந்திருக்கிறாள். அவருக்கு தனஞ்செயா என்பவர் நீச்சல் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறார். இதையடுத்து, லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு தனது சகோதரனை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் சாலு கிணற்றுக்குள் குதித்தது தெரியவந்துள்ளது.