அனைத்து அரசு பள்ளிகளையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் - மத்திய மந்திரியிடம் புதுச்சேரி அமைச்சர் கோரிக்கை

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தக் கோரி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானிடம், அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2022-10-02 11:14 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தக் கோரி மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மந்திரி தர்மேந்திர பிரதானிடம், அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை வைத்துள்ளார்

புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத்திட்டங்களே பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் யாணம் பிராந்தியத்தில் ஆந்திரா பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம், புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த மத்திய மந்திரியை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக மனு அளித்துள்ளார். மேலும் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்ததாக அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்