ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலைக்கு பின்... அதிர வைக்கும் 12 கொலைகள்; பகீர் ரிப்போர்ட்
டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலைக்கு பின் ஒரு மாதத்தில் அதிர வைக்கும் 12 கொலைகள் பற்றிய அறிக்கை வெளிவந்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண் அவரது காதலர் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூர படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு டெல்லியின் பல இடங்களில் வீசப்பட்டது.
வாக்கரின் காதலர் அப்தாப், மரிஜுவானா என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. அவர், வாக்கரை வீட்டுக்குள் பூட்டி, அடைத்து விட்டு, வேறு சில பெண்களுடன் பேசுவது வழக்கம் என்றும் வாக்கரின் தோழி தெரிவித்து உள்ளார்.
அப்தாப் தாக்கியதில் வாக்கர் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த கொடூர படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. வாக்கரின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 12-ந்தேதி இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், இதுபோன்ற 12 கொடூர கொலை சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்து இருப்பது, அதற்கடுத்து ஒரு மாதத்தில் தெரிய வந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி குற்ற மனோதத்துவ நிபுணரான அனுஜா கபூர் கூறும்போது, இதுபோன்ற படுகொலைகள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால், அப்தாப் சம்பவத்திற்கு பின்னர் ஊடகங்கள் விழித்து கொண்டன என்று கூறியுள்ளார்.
எனினும், ஷ்ரத்தா வாக்கர் படுகொலைக்கு பின்னர், கொலை செய்து, உடல் பாகங்களை துண்டுகளாக்கி, சூட்கேசில் அடைப்பது, வீசி செல்வது போன்ற பல சம்பவங்கள் வெளிவந்து திடுக்கிட செய்துள்ளன. இதன்படி, வாக்கர் படுகொலைக்கு பின்பு நாட்டில் 12 திடுக்கிடும் படுகொலைகள் தெரிய வந்துள்ளன. அதுபற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட் வெளிவந்துள்ளது.
கடந்த 18-ந்தேதி தில்தர் அன்சாரி என்பவரை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்தனர். அவர் பழங்குடியின பெண்ணான, 2 ஆண்டு காதலியான ரூபிகா பஹதீன் என்பவரை படுகொலை செய்து 50 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
அதே நாளில், ராஜஸ்தான் போலீசார் அனுஜ் சர்மா என்பவரை கைது செய்தனர். அவர் தனது உறவினரான சரோஜ் சர்மாவை கடந்த 11-ந்தேதி ஜெய்ப்பூரில் கொலை செய்துள்ளார். இதன்பின்பு, உடலை பல துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து டெல்லியில் வீசி சென்றுள்ளார்.
கடந்த 16-ந்தேதி உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் உமேஷ் சர்மா மற்றும் பர்வேஷ் குமார் சர்மா கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கித் கோக்கர் (வயது 40) என்பவரை மோதிநகரில் கொலை செய்துள்ளனர்.
உமேஷின் வீட்டில் அங்கித் வாடகைக்கு குடியிருந்து உள்ளார். பின்பு, உடலை துண்டுகளாக்கி உள்ளார். குற்றவாளி கிளினிக்கில் கம்பவுண்டராக வேலை செய்தது இதற்கு உதவியாக இருந்துள்ளது.
கடந்த 14-ந்தேதி அரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் வயல்வெளியில் பெண்ணின் தலை மற்றும் உடல் கிடந்துள்ளது. அவரது கை, கால்கள் சூட்கேசில் அடைக்கப்பட்டு இருந்தன.
கடந்த 9-ந்தேதி டெல்லி பஞ்சாபி பாக் பகுதியில் சாக்கடை ஒன்றில் கிடந்த சூட்கேசில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையிலான பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது.
கடந்த 8-ந்தேதி பீகாரில் நீலம் தேவி (வயது 45) என்ற பெண் படுகொலையில் ஷகீல் மியான் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பின்னர், பெண்ணின் கை, கால்கள், காதுகள் மற்றும் மார்பு ஆகியவற்றை ஷகீல் வெட்டியுள்ளார்.
கடந்த 6-ந்தேதி கர்நாடகாவில் பாகல்கோட் பகுதியில் தந்தை பரசுராம் குலாலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை மகன் விட்டல் குலாலி (வயது 21) கொலை செய்துள்ளார். இதன்பின்பு உடலை 15 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் போட்டு மறைத்துள்ளார்.
அதேநாளில், ரிஷி என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட நபரை, பண விவகாரத்தில் தனலட்சுமி என்ற பெண்ணை கொலை செய்ததற்காக விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு பின்னர், பெண்ணின் உடலை டிரம் ஒன்றில் ஒன்றரை ஆண்டுகளாக ரிஷி மறைத்து இருந்தது தெரிய வந்தது.
கடந்த நவம்பரிலும் இதுபோன்ற பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.
வாக்கர் சம்பவம் போல், கிழக்கு டெல்லியில் திரிலோக்புரி பகுதியில் தாய், மகன் சேர்ந்து தந்தையான அஞ்சன் தாஸ் என்பவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கொலை செய்து உடல் பாகங்களை பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளனர். அவர்களை நவம்பர் 28-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.
நவம்பர் 20-ந்தேதி தேர்வு கட்டணம் தராத வாக்குவாதத்தில் உஜ்வால் சக்ரவர்த்தி என்பவரை அவரது மகன், மனைவி கொலை செய்துள்ளனர். மேற்கு வங்காள போலீசார் அவர்களை கைது செய்தனர். அவரது உடல் பாகங்கள் குளத்தில் மிதந்தன.
வாக்கர் சம்பவம் தெரிய வந்து ஒரு வாரத்திற்கு பின்னர், நவம்பர் 19-ந்தேதி காதலி ஆராதனா பிரஜாபதியை, ஆசம்கார் பகுதியில் கொலை செய்ததற்காக பிரின்ஸ் யாதவ் என்பவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
பிரஜாபதி முன்பே திருமணம் ஆனவர் என தெரிந்து பிரின்ஸ் ஆத்திரமடைந்து உள்ளார். பெண்ணின் தலையை துண்டித்தும், உடல் பாகங்களை வெட்டியும் உள்ளார்.
நவம்பர் 18-ந்தேதி முகமது இஷ்தியாக் (வயது 36) என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். முகமது சலீம் (வயது 28) என்பவரை கொலை செய்து உடலை இஷ்தியாக் சூட்கேசில் அடைத்துள்ளார்.
உடலை ரெயில் முன் வீசி செல்ல இஷ்தியாக் திட்டமிட்டு உள்ளார். ஆனால், ரெயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் உடலை போட்டு விட்டு தப்பியுள்ளார்.
இந்தியாவில் படுகொலைகள் நடப்பது அதிகரித்து உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவர தகவலில், 2021-ம் ஆண்டில் 29 ஆயிரத்து 272 கொலைகள் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளது. இதன்படி, தினசரி 80 கொலைகள் நடக்கின்றன.
அதனுடன் இல்லாமல், உடலை அப்புறப்படுத்துவது மக்களிடையே அதிகம் பிரபலம் அடைந்து அவர்களின் கவனம் ஈர்த்து உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற குற்றவாளிகளை ஊடகங்கள் பிரபலப்படுத்துவதும் அவர்களுக்கு உக்கம் அளிக்கிறது. பிறரும் இந்த முறையில் படுகொலைகளை செய்யும் நோக்கங்களை அதிகரிக்கிறது. அது ஒரு பேஷனாகி வருகிறது. அப்தாப் கூட டெக்ஸ்டர் என்ற அமெரிக்க தொடர் நாடகத்தின் அடிப்படையில் கொலையாளி ஆகி உள்ளார் என கபூர் கூறுகிறார்.
ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எளிதில் அறுவை சிகிச்சைக்கான கருவிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைப்பதும் குற்றச்சாட்டுக்கு உரியது என்று கர்நாடகாவில் உள்ள குற்றவியல் துறை பேராசிரியர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அதிக கோபம் ஏற்படும்போது, குற்றவாளிகள் உடலை அதிக எண்ணிக்கையில் கூறு போடுகின்றனர் என அவர் கூறியுள்ளார். இது வழக்கு விசாரணையை கடினப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.