58 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் ராணுவ அதிகாரியின் உடல்

இந்தியாவில் புதைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல், 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மறுஅடக்கம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-30 02:11 GMT

கொல்கத்தா,

அமெரிக்க ராணுவ அதிகாரி

அமெரிக்க ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி வகித்தவர் ஹாரி கிளீன்பெக் பிக்கெட். 1913-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்த இவர், அந்நாட்டின் புகழ்பெற்ற ராணுவ அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தார்.

முதல், 2-ம் உலக போர்கள் இரண்டிலும் பங்கேற்ற பெருமைக்குரிய வெகு சில அமெரிக்க ராணுவ அதிகாரிகளுள் இவரும் ஒருவர்.

இந்தியாவில் அடக்கம்

கடந்த 1965-ம் ஆண்டு, இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள சுற்றுலா நகரான டார்ஜிலிங்குக்கு வந்திருந்த பிக்கெட், அங்கு மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் அங்குள்ள சிங்டம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் பிக்கெட்டின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்று அங்கு மறுஅடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிவந்தனர். அதையடுத்து இதுதொடர்பாக அமெரிக்க அரசும், இந்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது.

அமெரிக்க தூதர் நன்றி

டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒரு தனியார் இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்தின் உதவியுடன், அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு, இம்மாதம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறை தோட்டத்தில் மறுஅடக்கம் செய்யப்படும். இவ்வாறு 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் அவரது தாயகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

'முன்னாள் மேஜர் ஜெனரல் பிக்கெட்டின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொண்டு சேர்ப்பதில் உதவுவது, எங்களுக்கு பெருமையும், கவுரவமும் அளிக்கும் விஷயமாகும். இதற்கு உதவி செய்த இந்திய அரசுக்கும், டார்ஜிலிங் மாவட்ட மாஜிஸ்திரேட்டு பொன்னம்பலம் உள்ளிட்ட மேற்கு வங்காள அரசுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்' என்று கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் மெலிண்டா பாவெக் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்