ஆம்புலன்ஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; டிரைவர் உள்பட 11 பேர் படுகாயம்

குந்துகோல் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் டிரைவர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

பெங்களூரு:

குந்துகோல் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் டிரைவர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவ முகாம்

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவில் புறநகர் பகுதியில் பெல்லடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் வசதிக்காக நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்டு அந்த பகுதியினர் கண் பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து அன்றைய நாள் மாலையில் முகாமை முடித்துவிட்டு, தனியார் மருத்துவ குழுவினர் 11 பேர் அந்த ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஆம்புலன்சில் உப்பள்ளி நோக்கி புறப்பட்டனர். அவர்கள் சம்கி-சிரூர் சாலையில் சென்றபோது அந்த பகுதியில் இருந்த கல்லூரி அருகே திடீரென ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

டிரைவர் உள்பட..

அப்போது டிரைவர் ஆம்புலன்சை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். எனினும், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. மேலும், சாலையின் நடுவே கவிழ்ந்தது. விபத்தில் ஆம்புலன்சில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், டிரைவர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்ததால், அதில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து குந்துகோல் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

அந்த தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் நின்றவர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மருத்துவ முகாமை முடித்துவிட்டு, உப்பள்ளி நோக்கி சென்றதும், அப்போது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதும் தெரிந்தது. மேலும் விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் கதக் மாவட்டத்தை சேர்ந்த கள்ளப்பனவர் (வயது 22) என்பதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்