கர்நாடகத்தில் 21 அரசு அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை சோதனை- பல கோடி ரூபாய் நகை-பணம் சிக்கியது

கர்நாடகத்தில் நேற்று அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரு உள்பட 80 இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், பணம் சிக்கியது.

Update: 2022-06-17 20:43 GMT

பெங்களூரு

கர்நாடகத்தில் நேற்று அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரு உள்பட 80 இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், பணம் சிக்கியது.

21 அரசு அதிகாரிகள்

கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரும் அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சமீபகாலமாக ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 21 அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெலகாவியில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி வரும் பீமாராவ் ஒய்.பவார். உடுப்பியில் சிறிய நீர்பாசனத்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ஹரீஷ். ஹாசனில் சிறிய நீர்பாசனத்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ராமகிருஷ்ணா. கார்வாரில் பொதுப்பணித்துறையில் உதவி என்ஜினீயராக பணி செய்து வருபவர் ராஜீவ் புரசய்யா நாயக்.

மின்வாரிய துறை

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டையில் ஜூனியர் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் போப்பையா. பெலகாவியில் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வருபவர் மதுசூதன். விஜயநகர் மாவட்டம் ஹூவினஅடஹள்ளியில் சிறிய நீர்பாசனத்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் பரமேஸ்வரப்பா.

இதுபோல பாகல்கோட்டையில் வட்டார போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எல்லப்பா படசாலி. பாகல்கோட்டையில் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனராக பணியாற்றி வருபவர் சங்கரப்பா நாகப்பா கோகி. கதக்கில் பஞ்சாயத்து தரம் 2-ல் செயலாளராக பணியாற்றி வருபவர் பிரதீப் ஆலூர். பெங்களூருவில் மின்வாரிய துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சித்தப்பா.

ஊழல் தடுப்பு படைக்கு புகார்

பீதரில் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருபவர் திப்பண்ணா. பீதரில் உள்ள கர்நாடக கால்நடை பல்கலைக்கழகத்தில் உதவி கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் மிருதாஞ்சனேயா. சிக்பள்ளாப்பூரில் நீர்ப்பாசனத்துறையில் என்ஜினீயராக பணியாற்றும் மோகன்குமார். கார்வாரில் மாவட்ட பதிவாளராக பணியாற்றும் ஸ்ரீதர், பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத்.

பெங்களூருவில் பி.டி.ஏ.வில் குரூப் சி ஊழியராக பணியாற்றி வரும் சிவலிங்கய்யா, கொப்பல் மாவட்டம் கங்காவதி புறநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் உதய்ரவி, கடூர் புரசபை காசாளர் திம்மய்யா. ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் யூ.டி.பி. அலுவலகத்தில் பணியாற்றும் சந்திரப்பா, பெங்களூருவில் நிலப்பதிவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜனார்த்தன் ஆகிய 21 அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படையினருக்கு புகார்கள் சென்று இருந்தன.

தாய் பெயரில் 4 ஏக்கர் நிலம்

இதையடுத்து நேற்று மேற்கண்ட 21 அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூருவில் 10 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 80 இடங்களில் இந்த சோதனை நடந்து இருந்தது. சோதனையில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது 21 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருந்ததை ஊழல் தடுப்பு படையினர் கண்டுபிடித்து இருந்தனர். மேலும் 21 அரசு அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் இருந்து சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊழல் தடுப்பு படையினர் நடத்திய சோதனையில் பாகல்கோட்டையில் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனராக பணியாற்றி வருபவர் சங்கரப்பா நாகப்பா கோகிக்கு சொந்தமாக 5 இடங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் சங்கரப்பா தனது மகன் பெயரில் வங்கியில் ரூ.8.90 லட்சம் வைத்திருந்ததும் தெரியவந்து உள்ளது. பெங்களூருவில் வசித்து வரும் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மஞ்சுநாத் தனது மனைவி பெயரில் ஜெயநகரில் வணிக வளாகமும், மகள் பெயரில் கே.ஆர்.புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பும், தனது தாயின் பெயரில் தாவரகெரேயில் 4 ஏக்கர் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

2 கிலோ தங்கம்

பாகல்கோட்டையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரியாக பணியாற்றி வரும் எல்லப்பா வீட்டில் இருந்து ரூ.20 லட்சத்தை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். உடுப்பியில் நீர்ப்பாசனத்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் ஹரீஷ் வீட்டில் இருந்து 2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கம், கைக்கெடிகாரங்கள், தங்க தட்டுகள், தங்க பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக சோதனை நடந்த 21 அரசு அதிகாரிகள் வீடுகளில் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள், பணம், வெள்ளி பொருட்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி ஊழல் தடுப்பு படையினர் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் ஒரே நாளில் 21 அரசு அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் பதுக்கிய ரூ.10 லட்சம் சிக்கியது

கர்நாடகத்தில் நேற்று 21 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், பெலகாவியில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி வரும் பீமாராவ் ஒய் பவாருக்கு, ஊழல் தடுப்பு படையினர் தனது வீட்டில் சோதனை நடத்த வருவது பற்றி முன்கூட்டியே தகவல் கிடைத்து உள்ளது. இதனால் அவர் தனது வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை கவர்களில் கட்டி கழிவறையில் பதுக்கி வைத்து உள்ளார். ஆனால் ஊழல் தடுப்பு படையினர் தீவிர சோதனையில் அந்த பணம் சிக்கியது.21 அரசு அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை சோதனை

பல கோடி ரூபாய் நகை-பணம் சிக்கியது

Tags:    

மேலும் செய்திகள்