வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்

முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் உதவி தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளும்படி நாகவேணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-08 18:45 GMT

கோலார் தங்கவயல்

உதவி தொகை

கோலார் தங்கவயலில் முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை பெறுவதில் யார் பயனாளிகள் என்பது சமீப காலமாக குழப்பத்தில் உள்ளது.

இந்தநிலையில் உதவி தொகை பெறுபவர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்கும்படி தாலுகா நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் எங்கு உதவி தொகைகளை பெறுகிறார்களோ அந்த வங்கிகளில் ஆதார் எண்ணை கொடுத்து புதுப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று இதுகுறித்து கோலார் தங்கவயல் ராபர்சன்பேட்டையில் தாசில்தார் நாகவேணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோலார் தங்கவயலில் முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் உள்பட 5 வகையான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையை 38 ஆயிரத்து 249 பேர் பெற்று வருகின்றனர். இந்த உதவி தொகைகள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகம் மூலம் பெற்று வருகின்றனர்.

ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்

இந்த பயனாளிகள் அனைவரும் தகுதியானவர்களா? என்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து, உதவி தொகை பெறும் கணக்கை புதுப்பித்து கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.

அதாவது சம்பந்தப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் உள்ள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால் போதும். உண்மையான பயனாளிகள் குறித்த விவரங்கள் கிடைத்துவிடும். இதனால் போலி பயனாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த உத்தரவை உடனே கடைப்பிடிக்கவேண்டும்.

அலட்சியமாக செயல்படுபவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படமாட்டாது. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு உதவி தொகை வழக்கம்போல கிடைக்கும். கோலார் தங்கவயலில் இதுவரை 2,798 பேர் வங்கி கணக்கு மற்றும் தபால் நிலையங்களில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

இதற்காக 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்திற்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டு பயன்பெறும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்