தனியார் தங்கும் விடுதியில் தொழிலாளி மர்மசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் கைது; ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணமா? என போலீஸ் விசாரணை
பெங்களூருவில் தனியார் தங்கும் விடுதியில் தொழிலாளி மர்மசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு:
தமிழக வாலிபர் கைது
பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் கடந்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளியான ராஜகோபால் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜகோபால் மர்மசாவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சென்னையை சேர்ந்த தமிழ்வண்ணன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள்
அதாவது சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தமிழ்வண்ணன் வேலை செய்துள்ளார். அவருக்கும் ராஜகோபாலுக்கும் இடையே 2020-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் தங்களது மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளனர். மேலும் ராஜகோபாலும், தமிழ்வண்ணனும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மே மாதம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வந்த தமிழ்வண்ணன், தேவரபீசனஹள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அதன்பிறகு, ராஜகோபாலை தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வரும்படி தமிழ்வண்ணன் கூறியுள்ளார். அதன்படி, கடந்த மாதம் (ஜூன்) பெங்களூருவுக்கு அவர் வந்துள்ளார். இருவரும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் 2 பேருக்கும் வாக்குவாதம் உண்டானதாக கூறப்படுகிறது. அதாவது தன்னுடன் பெங்களூருவிலேயே இருக்கும்படி ராஜகோபாலிடம் தமிழ்வண்ணன் கூறியுள்ளார்.
தடயவியல் ஆய்வுக்காக...
அந்த சந்தர்ப்பத்தில் ராஜகோபால் மயக்கம் போட்டு கீழே விழுந்து உயிர் இழந்ததாக போலீசாரிடம் தமிழ்வண்ணம் கூறியுள்ளார். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு ராஜகோபால் உயிர் இழந்தாரா? அல்லது என்ன காரணத்திற்காக அவர் மரணம் அடைந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைத்த பிறகு தான் ராஜகோபால் சாவுக்கான சரியான காரணம் தெரியவரும் என மாரத்தஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கைதான தமிழ்வண்ணன் மீது மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.