தலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
தலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.;
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசியல் சாசனம்
ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு 1992-ம் ஆண்டு இந்திரா கஹானி வழக்கில், மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு உயர்சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதனால் இடஒதுக்கீட்டு அளவு 60 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறுவதாக உள்ளது. தற்போது தலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறுவதாக உள்ளது. இந்த இடஒதுக்கீட்டு அதிகரிப்புக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
சட்டசபை கூட்டம்
இடஒதுக்கீட்டு அதிகரிப்புக்கு அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. சட்டசபை கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினேன். மத்தியிலும் பா.ஜனதா அரசே உள்ளது. அதனால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய முடியும். இதை இந்த அரசு செய்திருந்தால், பா.ஜனதாவினரின் நேர்மையை ஏற்று இருப்போம்.
பா.ஜனதா அரசு அமைந்து 27 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, நாங்கள் வலியுறுத்திய பிறகு இடஒதுக்கீட்டுக்கு அவரச சட்டத்தை பிறப்பித்துள்ளது. சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். மத்திய அரசு மீது அழுத்தம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
காங்கிரசுக்கு கிடைக்கும்
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. அங்கு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் அதனை சேர்க்க வேண்டும். இந்த பணியை கர்நாடக பா.ஜனதா அரசு செய்ய வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரசின் பாதயாத்திரை கட்சிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பயன் வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்கும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.