10 வயது மகனை விஷம் கொடுத்து கொன்ற போலீஸ்காரர்
சிறுவனின் உடல் அருகே பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்து பாட்டில்கள் காலியாக கிடந்துள்ளன.;
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் நவ்சாரி நகரை சேர்ந்தவர் சஞ்சய் பரியா. போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி வன்ஷ் (10 வயது) என்ற மகன் இவருக்கு இருந்தான். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சஞ்சய் பணிக்கு செல்லும்போது வன்ஷை உடன் அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. அவருடைய போன் சுவிட்ச் ஆப் ஆனது.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு பின்னர் நேற்று தன் மனைவியிடம் சஞ்சய் செல்போனில் பேசினார். அப்போது வன்ஷை கொலை செய்துவிட்டதாகவும், பணியிடத்தில் உள்ள அறையில் உடல் இருப்பதாகவும் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சஞ்சய் பணிபுரிந்து வந்த போலீஸ்நிலையம் அருகே உள்ள போக்குவரத்து நிழற்குடைக்கு சென்று பார்த்தனர்.
அங்கே வாயில் நுரை தள்ளியநிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு வன்ஷ் சடலமாக கிடந்துள்ளான். மேலும் சிறுவனின் உடல் அருகே பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்து பாட்டில்கள் காலியாக கிடந்துள்ளன. இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சஞ்சய் பரியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.