ராமர் கோவில் விழாவுக்கு தேதி ஒதுக்க கடிதம் வந்தது; அழைப்பிதழ் வரவில்லை: கெஜ்ரிவால்

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் நிகழ்ச்சியிது என கூறி காங்கிரஸ் கட்சி விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

Update: 2024-01-11 04:10 GMT

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

இதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். எனினும், இந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், அயோத்தியில் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வரப்பெற்றது. எனினும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் நிகழ்ச்சியிது என கூறி காங்கிரஸ் கட்சி விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு, விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வரவில்லை என கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக தேதிகளை ஒதுக்க வேண்டும் என தெரிவித்து கெஜ்ரிவாலுக்கு, சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று வந்தது. ஆனால், அதற்கு பின்னர் முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என ஆம் ஆத்மியின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்