தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் வீட்டின் மீது பாய்ந்தது; 500 கோழிகள் செத்தன

பண்ட்வால் அருகே தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் ஒன்று வீட்டின் மீது பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டில் இருந்த பெண் படுகாயம் அடைந்தார். மேலும் சரக்கு வாகனத்தில் இருந்த 500 கோழிகள் செத்தன.

Update: 2023-07-15 18:45 GMT

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சரத்கா அருகே கூரேலு பகுதியில் பிராய்லர் கோழிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சரக்கு வாகனம், தாறுமாறாக ஓடியது. பின்னர் திடீரென்று அந்த சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த வீடு மீது பாய்ந்து பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில், வீட்டின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தன. மேலும் சுவரும் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த பெண் ஒருவர் இடிபாடுகளிடையே சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் சரக்கு வாகனத்தில் இருந்த 500 பிராய்லர் கோழிகள் பரிதாபமாக செத்தன.

அதிர்ஷ்டவசமாக சரக்கு வாகன டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விட்டலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மங்களூரு அரசு வென்லாக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்