செல்போன் பேசியபடி ஸ்கூட்டர் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தலையில் கட்டிய துப்பட்டாவுக்குள் செல்போனை செருகி, அதில் பேசியபடி ஸ்கூட்டரில் சென்ற வீடியோ வைரலானது.;
பெங்களூரு,
பெங்களூருவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும்போது விபத்துகளில் சிக்கி அவர்கள் பலியாகின்றனர். இதனால் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெண் ஒருவா் ஸ்கூட்டர் ஓட்டும்போது துப்பட்டாவை தலையை சுற்றி கட்டிவிட்டு, அதில் செல்போனை செருகி வைத்து பேசிக்கொண்டே சென்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. புதுமையான யோசனை என பலர் கிண்டலாக கருத்து தெரிவித்தனர். மேலும் பலர் அவருக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி எலகங்கா பகுதியை சேர்ந்த அந்த பெண்ணை கண்டுபிடித்தனர். மேலும் அந்த பெண்ணின் ஸ்கூட்டருக்கு காப்பீடு செய்யாததும், ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தலைக்கவசம் அணியாதது, செல்போன் பேசியபடி வாகன ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவரிடம் ஒட்டுமொத்தமாக ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.