காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

ஹனூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். மற்றொரு கிராமத்தில் கரடி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

Update: 2022-12-15 18:45 GMT

கொள்ளேகால்:

காட்டு யானை அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலை அருகே கோக்பரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்தப்பகுதியில் காட்டு யானைகள், விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்த காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டியடிக் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி புட்டய்யா என்பவர், வனப்பகுதியையொட்டி உள்ள தனது விளைநிலத்துக்கு சென்றார். அங்கு அவர் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

விவசாயி படுகாயம்

அந்த சமயத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அவரது விளைநிலத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த புட்டய்யா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் யானை விடாமல் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்று தும்பிக்கையால் புட்டய்யாவை தூக்கி வீசியது. மேலும் அவரை காலால் மிதித்தது. இதையடுத்து அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

காட்டு யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த புட்டய்யா, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து புட்டய்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரடி தாக்கி...

இதேபோல், சாம்ராஜ்நகர் அருகே மார்தள்ளி பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி அட்டகாசம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கடபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெல்லதம்பாடி என்பவர், நேற்று முன்தினம் அங்குள்ள விளைநிலத்துக்கு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று அவரை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், உயிருக்கு போராடினார்.

அதனை பார்த்த அக்கம்பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்த விவசாயிகள், கரடியை விரட்டியடித்து அவரை மீட்டனர். இதையடுத்து அவர் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் சம்பவத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்