பண மதிப்பிழப்பால் செல்லாமல் போன ரூபாய் நோட்டுகளை ஏற்க கோரிய வழக்குவிசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார்.

Update: 2023-03-21 18:45 GMT

புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். அதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் 58 ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று, கடந்த ஜனவரி 2-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரிதான் என உறுதி செய்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாகிப்போன ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய தனிப்பட்ட வழக்குகளை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டதுடன், செல்லாததாகிப்போன ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் குறித்து 12 வாரங்களுக்குள் முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்