அபார திறமை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத பெண் குழந்தை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதிக்கு 4 மாதம் ஆன பெண் குழந்தை உள்ளது.

Update: 2024-05-14 05:20 GMT

பெங்களூரு,

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வயது முக்கியமில்லை என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. 4 மாதமே ஆன இந்த சுட்டிக் குழந்தையின் அபார திறமையால் இன்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகள் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை (பிளாஷ் கார்டு) காட்டியுள்ளார். குழந்தை சரியான அடையாளத்தை காட்டியுள்ளது.

இவ்வாறு குழந்தை இவான்வி தனது நினைவாற்றல் மூலம் வீட்டு பிராணிகள், பழங்கள், பூக்கள், காய்கறிகள், பறவைகள், வாகனங்கள், பல்வேறு நாடுகளில் 10 கொடிகள் என 125-க்கும் மேற்பட்டவற்றை படக்காட்சி மூலம் அடையாளம் காட்டுவதில் படுசுட்டியாக உள்ளது.

தனது குழந்தையின் அபார நினைவாற்றலை கண்டுவியந்த தாய் சினேகா, 125-க்கும் மேற்பட்டவற்றின் அடையாளத்தை காட்டுவதை வீடியோவாக பதிவு செய்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இவான்வி பெயரை சேர்த்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தேர்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் 4 மாதமே ஆன குழந்தை இவான்வி உலக சாதனை படைத்து பெற்றோருக்கும், பெங்களூருவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இதற்கு முன்பு 120 வகையான பொருட்களை அடையாளம் காட்டி ஆந்திராவை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாத  குழந்தை சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இவான்வி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்