முதல் கட்டமாக சென்னை, பெங்களூரு உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவிலான 5ஜி அலைக்கற்றையை வாங்கி உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் முடிவடைந்தது. ஏழு நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் 40 சுற்றுகளுக்குப் பிறகு ஏல தொகை ரூ. 1.5 லட்சம் கோடியை எட்டியது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்று இருந்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவிலான 5ஜி அலைக்கற்றையை வாங்கியது. மொத்த அலைக்கற்றை ஏலத்தில் அதன் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் 5ஜி சேவை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முதற் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. மத்திய அரசு 5G வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை ஆனால் தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அக்டோபர் மாதத்தில் 5ஜி அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 29-ந்தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நடத்தும் தொடக்க விழாவில் 5ஜி நெட்வொர்க்கை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்று பிரபல பிசினஸ் லைன் நாளிதழ் தற்போது தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நரங்களில் 5ஜி சேவை வெளியிடப்படுகிறது.