இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு
மண்டியா அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மண்டியா:
5 பேர் சாவு
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா திட்டனஒசஹள்ளி கேட் அருகே பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு 2 கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. அதாவது, ஹாசனில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கார் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரை தாண்டி எதிரே பெங்களூருவில் இருந்து ஹாசன் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியது. 2 கார்களில் பயணித்த 5 பேர் இடிபாடுகளிடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள்
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக நாகமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், பெண்டிகானா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் ஹாசனை சேர்ந்த சீனிவாச மூர்த்தி (வயது 50), அவரது மனைவி ஜெயந்தி (45), பிரபாகர், மற்றொரு காரில் வந்த தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கணேஷ் என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் ஹாசனை சேர்ந்த அட்சல், லட்சுமிநாராயண் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கவுதம் சபரீஷ், கெவின் என்பதும் தெரியவந்தது.
திருமண நிகழ்ச்சி, சுற்றுலா
மேலும் சீனிவாசமூர்த்தி, ஜெயந்தி, பிரபாகர், அட்சல், லட்சுமிநாராயண் ஆகிய 5 பேரும் பெங்களூருவில் நடந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு ஹாசனை நோக்கி காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கணேஷ், கவுதம், சபரீஷ், கெவின் ஆகிய 5 பேரும் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் 5 பேரும் காரில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது அவர்கள், திட்டனஒசஹள்ளி கேட் பகுதியில் வந்தபோது, அங்கு மழை காரணமாக சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரில் சென்றபோது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் காரின் பிரேக்கும் செயலிழந்ததாக தெரிகிறது. இதனால் அந்த கார் சாலை தடுப்பை தாண்டி மறுபுறத்துக்கு சென்று திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து நடந்த இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து காரணமாக பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து பெண்டிகானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.