தங்க நகை வியாபாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள காரணமான தங்க நகை வியாபாரிக்கு உப்பள்ளி கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
உப்பள்ளி-
தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள காரணமான தங்க நகை வியாபாரிக்கு உப்பள்ளி கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
கடன் பிரச்சினை
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுனை சேர்ந்தவர் மகாந்தேஷ். தொழில் அதிபர். கடந்த 2014-ம் ஆண்டு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வியாபாரி நிதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நிதின் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே ஆண்டு, நிதின், மகாந்தேசிடம் பல லட்சம் ரூபாய் கடனாக வாங்கினார்.
பல மாதங்கள் ஆகியும், அந்த பணத்தை நிதின், மகாந்தேசிற்கு திரும்ப கொடுக்கவில்லை. இதையடுத்து மகாந்தேஷ், நிதினிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு நிதின் கோபமடைந்தார். மேலும் பணத்தை கொடுக்க முடியாது. என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள் என்று கூறி மிரட்டியுள்ளார்.
குடும்பத்துடன் தற்கொலை
இதனால் மிகவும் மனம் உடைந்து போன மகாந்தேஷ், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி 2014-ம் ஆண்டு மே மாதம் பெலகாவிக்கு குடும்பத்தினருடன் சென்று அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.அங்கு அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சையனைடு கொடுத்து கொலை செய்தார்.
பின்னர் அவர் சையனைடு தின்று தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை பெலகாவி மற்றும் உப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நிதினை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உப்பள்ளி 5-வது கோர்ட்டில் நடந்து வந்தது.
வியாபாரிக்கு 4 ஆண்டு சிறை
நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது. அப்போது நீதிபதி இறுதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் தங்க நகை வியாபாரி நிதின், மகாந்தேசின் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியது ஆதாரத்துடன் உறுதியானது.
எனவே தற்கொலைக்கு தூண்டியதாக வியாபாரி நிதினுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் அவரை தார்வார் சிறையில் அடைத்தனர்.