கூட்டு பலாத்காரம், இரட்டைக்கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை - கோர்ட்டு அதிரடி

குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2024-05-04 22:26 GMT

புதுடெல்லி,

அரியானா மாநிலம் டிங்கர்கேரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று, விவசாயியையும், அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்து விட்டு, அவர்களது உறவுப்பெண்கள் 2 பேரை கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் ஒருவர் 16 வயது சிறுமி ஆவார். பின்னர் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது.

இந்த இரட்டைக்கொலை, கூட்டு பலாத்காரம் மற்றும் கொள்ளை சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அரியானா மாநில போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை சி.பி.ஐ. கையிலெடுத்து விசாரணை நடத்தியது. இதில் ஹேமத் சவுகான், அயன் சவுகான், வினய், ஜெய்பக்வான் ஆகியோர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் கடந்த மாதம் 10-ந்தேதி தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு, மேற்படி 4 பேரும் குற்றவாளி என அறிவித்தது. மீதமுள்ளவர்களை விடுதலை செய்தது. இந்த 4 பேருக்கும் நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ரூ.8.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்