டெல்லியில் கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது....!
டெல்லியில் கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடும் இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான் சிறந்தது.
அப்படிப்பட்ட நன்றி உள்ளம் கொண்ட நாயை இரக்கமின்றி அடித்து கொன்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் சுற்றிதிரிந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் அடித்து கொன்றுள்ளனர். நாயை இரக்கமின்றி தாக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
அதில், நான்கு கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக் குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒருவர் மட்டுமே நாயை அடித்து கொன்றுள்ளார். உடனிருந்தவர்கள் நாயை அடிக்க ஊக்குவித்துள்ளனர்.
வீடியோ அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் 4 பேரும் ஓக்லாவில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் என்றும் கர்ப்பிணி நாய் மாணவர்களை பார்த்து குரைத்ததால் எரிச்சல் அடைந்து கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.